மெகா இயக்குநர் ஷங்கர் அவர்களோடு முதல் எட்டு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்தவன் என்கிற முறையில் அவருடைய திரைக்கதை அமைக்கும் தொழில்நுட்பம் நான் அறிவேன். அவருடைய முதன்மை கதாபாத்திரங்கள் மிகைப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள் அரசியலால் அல்லது சமுதாயத்தால் அல்லது கெட்ட மனிதர்களால் பாதிக்கப்பட்ட சாதாரண மனிதன் அசாதாரண மனிதனாக மாறுவது தான் அவரின் வெற்றிப்படங்களின் கதை.
மேற்கல்வி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட சராசரி மாணவன் கோடிகோடியாக கொள்ளையடித்து மருத்துவ கல்லூரி கட்டுவது ஜென்டில்மேன் திரைப்படத்தின் கதை. ஏழை போலீஸ் கான்ஸ்டபிளின் மகன்,ஒரு மாநில கவர்னரின் மகளை காதலித்து கரம் பிடிப்பது காதலன் திரைப்படத்தின் கதை. சுதந்திர போராட்ட தியாகி தன் எண்பதாவது வயதில் லஞ்சம் வாங்குபவர்களை வேட்டையாடுவது இந்தியன் திரைப்படத்தின் கதை.
அவரிடம் உதவி இயக்குநராக, இணை இயக்குநராக இருந்தவர்கள் அனைவரும் அவரின் வெற்றியை கண்கூடாக பார்த்தவர்கள் நான் உட்பட. அவரின் திரைக்கதையாக்கத்தை உடன் இருந்து பார்த்தவர்கள். எந்த காட்சியையும் பிரம்மாண்டமாக யோசித்தால் தான் அவருக்கு திரைக்கதை பூர்ணமானதாக எண்ணி திருப்தியடைவார். படத்தின் முதல் காட்சியிலிருந்து கிளைமாக்ஸ் வருவதற்குள் பத்து கிளைமாக்ஸ் காட்சிகள் வருவதற்கான தருணங்கள் நிறைத்ததாக அவரின் திரைக்கதைகள் இருக்கும். இதனால் அவரின் திரைப்படங்கள் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,இந்தி என அனைத்து மொழிகளிலும் வெற்றிக்கரமாக ஓடி வசூலில் வாரிக்கொட்டின. இது எங்களை போன்ற உதவி,இணை இயக்குனர்களுக்கு பெரும் ஊட்டச்சத்து. அவரை போன்று சமுதாயப் பிரச்சினையை கையாண்டு பிரம்மாண்டமாக கதை யோசிப்பது. பாடல்களை பிரம்மாண்டமாக எடுப்பது. பாடலின் முதல்வரிக்கு இரண்டு வாரம் யோசிப்பது என்று பல விசயங்கள் பாடமானது.
நான் இயக்குநர் ஷங்கர் அவர்களை விட்டு வெளியே வந்து, தனியாக படம் இயக்கலாம் என்று முடிவு செய்து அவரை போன்று சமுதாயப் பிரச்சினையை மையமாக வைத்து ஒரு கதையை யோசித்தேன். அது பெரிய பட்ஜெட் படம். சரியான கதாநாயகன் கிடைக்காமல் அல்லாடி நான்கு வருடம் வீணானது. அப்பறம் தான் அவரை போன்று கதை யோசித்து பிரம்மாண்டமாக படம் எடுக்க வேண்டும் என்பது எத்தனை விபரீதமான பிரம்மாண்டமான முட்டாள்தனமான யோசனை நடைமுறைக்கு ஒவ்வாது என்று புரிந்தது. அப்பறம் நமக்கென்று ரசனையான சின்ன கதைகளை யோசித்து படங்களை இயக்கத் துவங்கினேன்.
ஆனால் அவரின் உதவியாளர்கள் பலரும் ஷங்கர் சாரை போல கதை எழுதி படம் இயக்க முயன்றனர். சிலர் படம் வெளிவந்து படுதோல்வி அடைந்தது. சிலரின் படம் வெளிவராமல் கிடக்கிறது. இயக்குநர் ஷங்கர் அவர்களை போன்று பிரம்மாண்டமாக படம் இயக்கவேண்டும் என்று நினைப்பது எளிய ஆசை அல்ல. பிரம்மாண்டமான ஆசை அது பத்து பேரில் ஒருவருக்கு கை கூடும். ஆனால் அந்த கதை வெற்றியடைய பெருஅனுபவம் வாய்ந்த கதை ஞானமும், திரைக்கதை பற்றிய கூரிய அறிவும், திரைப்படம் கமர்சியலாக மக்களை சென்றடைய வேண்டுமென்ற பிடிவாதமான தீர்மானமும் தேவை. இம்மி பிசகினால் கூட அந்த படங்கள் கேலிக்குரியதாக மாறிவிடும். அதீத கவனமும்,கடினமான உழைப்பும்,திறமையான கூட்டணியும் தேவை.
இயக்குநர் ஷங்கர் அவர்களின் வருகைக்கு பிறகு சமுதாயப்பார்வை கொண்ட படங்களை கமர்சியலாக வழங்கும் முறை தமிழ் சினிமாவில் மேலும் வலுப்பெற்றது. நிறைய இயக்குநர்கள் முயற்சித்தனர். இவருடைய பாணி படங்களை முயற்சித்து முழுவெற்றிக்கண்டவர் இயக்குநர் முருகதாஸ். ரமணா திரைப்படத்தில் முருகதாஸ் மிக திறன்பட சமுதாய கருத்துகளை கமர்சியலாக முன்வைத்தார்,அதில் வெற்றியும் கண்டார். அதைத்தொடர்ந்து துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படத்திலும் சமுதாயக் கருத்துகள் மூலமாக இயக்குநர் முருகதாஸ் பெரு வெற்றியை பெற்றார். இன்று அந்த வரிசையில் இயக்குநர் அட்லி மெர்சல் திரைப்படத்தின் மூலம் சமுதாய மேம்பாட்டிற்கான கருத்துகளை கூறி கமர்சியல் வெற்றிக் கண்டுள்ளார். இணையத்தில் கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்தியா முழுக்க இன்று மெர்சல் ஒரு பேசுபொருளாக மாறியது வசூலில் தொடர்ந்து முன்னணியில் இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த இடம் மிக அபூர்வமான இடம். விமர்சனத்திற்கு உட்பட்டாலும் டிக்கெட் விலையேற்றம்,ஜிஎஸ்டி வரி விதிப்பு என்ற இன்றைய சூழ்நிலையில் ஜிஎஸ்டியை பற்றி பேசியே இந்த வெற்றி கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
Comments