96 - Tamil Movie

நேற்று தான் 96 திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது நேர்ந்து விடக்கூடாதுன்னு தான் படத்தை பார்க்காமல் தள்ளிப்போட்டு வந்தேன். மெதுவாக என் பள்ளி நாட்கள். கூச்சமுள்ள பையனான என்னை விஜய் சேதுபதியாக பார்த்தேன். அவ்வளவு தான் கால்கள் தரையில் இல்லை. ஆழ்மனதியானத்தில் மூழ்கி விட்டேன். கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. ஜானு ராமை நெஞ்சில் தொடும் போது என் பிபி ஏறத்துவங்கியது. நீ இன்னும் வெர்ஜினா என்று கேட்டப்போது 34 வயது வரையான என் திருமணம் ஆகாத வாழ்வை எண்ணிக்கொண்டேன். இளையராஜாவின் பாடல்களை ஜானு பாடும் போது என் ஆன்மா எங்கோ கேவி கேவி அழத்துவங்கிவிட்டது. எவ்வளவு மன நெருக்கடியில் இந்த மனசு தவித்தது. ஒரு ஆன்ம விடுதலை. மெய் மயக்கம். திரையில் என்னை நான் பார்த்தேன். பெண்ணை தொடுவதில் ஒரு மயக்கம் உள்ளது, ஆனால் பெண்ணை தொடாமல் நாக்குக்கடியில் மனதின் மர்மப்பிரதேசத்தில் அந்த நினைவுகளை உருட்டிக்கொண்டு இருப்பதில் உள்ள மகிழ்ச்சி பேரானந்தம்.. விளக்க முடியா உணர்வு.. அது தான் பெரு மயக்கம்.
திரையில் படம் முடிந்த போது நான் என் 92 களில் பயணிக்கத்துவங்கிவிட்டேன்.
நன்றி விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம், இளையராஜா சார்........ ஷம்மி....
படத்தின் துவக்கக்காட்சிகளில் வரும் ஒளிப்பதிவு மிக அருமை ஷண்முக சுந்தரம்,மகேந்திரன் இருவருக்கும் என் வாழ்த்துகள்.
மிக குறைவான வார்த்தைகளில் மிக அழுத்தமான நடிப்பால் 80களின் தமிழ் இளைஞனை திரையில் கொண்டு வந்து நிறுத்திய விஜய் சேதுபதிக்கு வாழ்த்துகள்.
பெரும்பான்மையான தமிழ் இளைஞன் மௌனராகம் கார்த்திக் இல்லை.... தாழ்வு மனப்பான்மையில் பெண்ணிடம் (காதலியிட்ம்) பேச கூசுகிற ஒருவன்.. பெண்ணின் கண்ணை பார்க்க வெட்கப்படுகிறவன் அதை மிக அழுத்தமாக இந்த திரைப்படம் பதிவு செய்துள்ளது.
திரிஷாவின் நடிப்பை அழகை விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் ஒரு விதமாய் வெளிப்படுத்தியது. 96 அதன் உச்சத்திற்கு எடுத்து சென்று விட்டது. திரிஷாவின் நடிப்பு கேரியரில் இது மிக முக்கியமான திரைப்படம். பாடலுக்கு நடனமாடாத திரிஷாவை பார்ப்பது எத்தனை மகிழ்ச்சி. திரிஷாக்கு இந்த திரைப்படத்தில் மொத்தம் இரண்டே இரண்டு சுடிதார்கள். இதுவே பெரும் புரட்சி.
பிரேம் உங்கள் ஆன்மாவின் கதையை அந்த கனவு விலகாமல் எழுதி நீங்கள் கனவு கண்ட சினிமாவை எடுத்து வெற்றி கண்டு உள்ளீர்கள். அழுத்தமான வரவேற்பு கை குலுக்கல்.