top of page

சூல் நாவல்


சூல் நாவல் படித்தேன். உருளைகுடி கிராமத்தின் வாழ்க்கை கண்முன்னால் நிழலாடியது. ஒரு நேர்கோட்டு கதையல்ல... சுதந்திரம் கிடைப்பதற்கு முன் உள்ள கிராமத்தின் வாழ்க்கை.கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஜமீனுக்கு கட்டுப்பட்ட ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு மனிதர்களின் தன்மை, செயல் இவற்றை அந்த மனிதர்களிடம் கேட்டறிந்து நாவலை எழுதியுள்ளார். சிலேபி கெண்டை மீனும் , சீமை கருவேல விதைகளும் விநியோகிப்பட்டது. அதனால் கிராமங்களின் நிலங்கள் பாதிக்கப்பட்டது.

அந்த கால பாவபுண்ணிய்ங்களுக்கு கடவுள் நின்று தண்டனை தருவதை 3 சிறுகதைகளில் மிக அழகாக சொல்லியுள்ளார்.

பாவம் செய்றவன் ரொம்ப காலத்துக்கு நல்லா தான வாழுறான் என்ற கேள்விக்கு அவன் நீண்ட நாட்கள் வாழ வைக்குது கடவுள்... ஏன்னா அவன் நம்பிய கொள்கைகள் கட்டி எழுப்பிய கோட்டைகள் அவன் கண்முன்னே உடைந்து சுக்கல்சுக்கலாக உடைவதை பார்ப்பதற்காக தான் பாவம் பண்ணியவனுக்கு நீண்ட ஆயுள் என்கிறார் சோ.த. மன்னர் ஆட்சியில் குற்றத்திற்கு தான் தண்டனை உண்டு பாவத்திற்கு தண்டனை இல்லை என்று மந்திரி சொல்லி பாவம் பண்ணியவனை அரண்மனையின் வேலையில் இருந்து நீக்கிவிடுவது. பாவம் செய்ததை எண்ணி அவன் படுகிற மன வேதனைகள் சொல்லி மாளாது.

இந்த நாவல் படிக்கும் முன்பு வரை கொடிக்கா பிள்ளைமார் என்றால் கொடுக்காப்புளியை விளைவித்தவர்கள் போல என்று எண்ணியிருந்தேன். நாவல் படிக்கும் போது தான் பிடிபட்டது. வெற்றிலைக்கொடிக்கு கொடிக்கால் நடுபவர்கள் கொடிக்கால் பிள்ளைமார்கள் என்று அழைக்கப்பட்டனர் என்ற தகவல்.

வெற்றிலைக்கு காரமும் மணமும் வேண்டி ஒரு சம்சாரி தொலைதுரரத்தில் இருக்கும் சம்சாரியிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் இடம் மிக அருமை.

விசுவாமித்திரரை பார்த்து தனுர்வேதம் கற்று வருவதை போல மிக அற்புதமாக உள்ளது.

ஊமைத்துரைக்கு உதவப்போன பனையேறியும் மாட்டுக்கு லாடம் கட்டும் ஆசாரியும் அவர் தரும் பொன்முடிப்பை காவல் காக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளது. இருந்தாலும் கொஞ்சம் நீளம் தான். சோ,த அவர்கள் சுருக்கியிருக்கலாம். நாவல் நெடுக உள்ள சம்பாஷனைகள் மண்ணின் மனிதர்களை நம் கண் முன் நிறுத்துகின்றன. பாலியல் சம்மதமான உரையாடல் நிகழ்த்தி தான் பழைய கிராமத்து வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருந்துள்ளது. அந்த பாலியல் கலந்து பேசுவது தான் மெல்ல தெருக்கூத்துக்குள் ஊடுருவி நாடகம் சினிமா என்று தடம் அமைத்துள்ளது. இயல்பான வாழ்க்கையில் பாலியல் பேச்சுகள் நாம் காணக்கிடைக்கிற காட்சியாகத்தான் இருக்கிறது.

பல அற்புதமான மனிதர்களை கண்முன் நிறுத்துகிறார். நிறைய கிராமத்து வாழ்க்கை சம்மந்தமான சொல்லாடல்,கிராமத்து கணிப்புகள்,நம்பிக்கைகள் நுண்ணிய தகவல்களை நம் முன் படைக்கிறார். நாவல் கரிசல் வாழ்க்கையின் ஆவணமாக உள்ளது.

51 views0 comments

Recent Posts

See All
bottom of page