top of page

வசந்தபாலனுக்கு வந்த சோதனை

Writer's picture: Vasantha BalanVasantha Balan


மும்பை விழாவில் கலந்து கொண்டபோது என் பெயர் வசந்தபாலன் என்று அறிமுகம் செய்தபோது ஓ வசந்த்பாலா how r u என்று பலர் முகம் மலர்ந்தனர்.நானும் ஆகா மும்பையில் நமக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று உளமகிழ்ந்தேன்.பாலிவுட்ல நாம ஒரு வலம் வரலாம் போல.

Day dream starts

பொன்னியின் செல்வனை எடுப்போமா அல்லது வேள்பாரியை இறக்கி விடுவோமா அல்லது வேற்று கிரகத்தில் இருந்து ஒரு பறக்கும் தட்டுன்னு ஒரு அறிவியல் படம் எடுப்போமா என்று பல்வேறு யோசனைகள். சிந்தனையை கலைத்த சில சில்வண்டுகள்.

அனுராக் வரலாயா என்று சிலர் ஆழ்ந்து விசாரிக்க நான் பதற்றமானேன்.

இல்லை என்றேன்.

உடனே ஒரு அழகான இளம் பெண்

நீங்கள் வசந்பாலா தானே.

அனுராக்கோட ராமன் ராகவ் திரைப்படத்தில் வேலை பார்த்த வசந்பாலா தானே என்று கேட்டார். சுந்தர் சி சார் படத்தை போல ஏதாவது டிவிஸ்ட அடிப்போமா அல்லது உண்மைவிளம்பியாகிவிடலாமான்னு யோசனை.

நட்பு முறிய போகிறது என்று தெரியும்.

இருந்தும் என்ன செய்ய…உண்மையை சொல்லிவிடலாமுன்னு முடிவு செய்து இல்லை என்று அழுத்தமாக சொன்னேன்.

அப்ப நீங்க யாரு எனறு கேட்டார்கள்.

நான் தமிழ் இயக்குநர் வசந்தபாலன் என்று சொன்னேன்.

அப்படியா என்று கேட்கக்கூடஇல்லை.

டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து நான் மெதுவாக பனிபள்ளதாக்கில் மூழ்கத்துவங்கினேன்.

மெதுவாக என்னை சுற்றி இருந்த கூட்டம் விலக துவங்கியது.

தனித்து விடப்பட்டேன்.

இது என்னடா நம் பெயருக்கு வந்த குழப்பம்/; அந்த புது எதிரி யார் ??

FLASHBACK – 1

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த இலக்கிய கூட்டத்தில்

சாருநிவேதிதா கலந்து கொண்டார்.

பொதுவாக என் படங்களை கழுவி கழுவி ஊற்றுவார்.

சாரு கூட்டத்தில் பேசும் போது

அனுராக்கோட ராமன் ராகவ் திரைப்படம் பார்த்தேன்.

அற்புதமான கிரைம் திர்லர் திரைப்படம்.

அதில் கதை என்று வசந்பாலா என்று போடப்பட்டிருந்தது.

அது நீங்கதானா என்று கேட்டார்.

நான் இல்லை என்று தலையாட்டினேன்.

உங்களை பாராட்டலாமுன்னு நினைச்சேன் அது நீங்க இல்லையா பரவாயில்லை..மும்பை வசந்த்பாலா நன்றாக கதை எழுதுகிறார் என்று என்னை விமர்சித்து சாரு பேசினார்.

யாருடா இது வசந்தபாலா நமக்கு வந்த புது எதிரின்னு யோசித்து கொண்டிருந்தேன்.

FLASHBACK – 2

1992 ம் ஆண்டு நான் சினிமாக்குள் நுழைந்த வருடம்.

ஜென்டில்மேன் படத்துவங்கவிழா அழைப்பிதழில்

உதவி இயக்குனர்கள் பெயர் போடப்படும்,

இயக்குநர் ஷங்கர் அவர்கள் கேட்டார்.

உன் பேரு என்னனு போட?? பாலன்னு போட்டுருவோமா?

அல்லது ஸ்பீல்பெர்க் பாலன்னு ஏதாவது கற்பனை பெயர் வைத்து கொள்கிறாயா அல்லது டைனோசர் பாலன் எப்படியா இருக்கு அல்லது

எழுத்தாளர் சுஜாதா சார் மாதிரி உன் காதலி பெயரை வெச்சுக்கிறியான்னு கிண்டலடித்து சிரித்தார்.

ஓரே குழப்பம்.

இயற்பெயர் பாலமுருகன் அதே வெச்சுருவோமா அல்லது

புனைப்பெயர் சூடுவோமோன்னு குழப்பம்.

அப்போது திரைக்கு வந்த அமராவதி திரைப்படத்தில்

ஒளிப்பதிவாளர் பெயர் பாலமுருகன்.

ஆகா சொந்த பெயரும் போச்சு.

இப்ப என்ன செய்யன்னு குழப்பம்.

யோசித்தேன்.

பாரதிராஜா.,,,பாரதிபாலன்…. நல்லா இல்லை.

பாலாராஜா…அது கேவலமாக இருந்தது.

கமல்ஹாசன்…பாலஹாசன் என்று யோசித்தேன்.

மகாகேவலமாக இருந்தது.

அப்பா பேரு குருநாதன்.

குருபாலன்….எப்படி இருக்கு பரவாயில்லை.

அம்மா பேரு வசந்தா…அப்ப வசந்தாபாலன்….

வசந்தாபாலன் ஒரு ரைமிங் நன்றாக இருந்தது.

வசந்தபவன்..வசந்தபாலன்…சூப்பரா இருக்குமுன்னு மனதில்

ஆயிரம் பட்டர்பிளை.

அப்புறம் அம்மா சந்தோசப்படுவாங்க…

பதின்பருவத்தில் அம்மாவோட நிறைய சண்டைபிடித்திருக்கிறேன்.

அதனால் அம்மா சந்தோசப்பட வசந்தபாலன் என்கிற பெயர் இறுதியானது. ஜென்டில்மேன் திரைப்படத்தின் டைட்டிலில் வசந்தபாலன் உதவி இயக்குநருன்னு பெயர் வந்தது.

ஷங்கர் சார் எப்போது என்னை வறண்டபாலான்னு தான் கூப்பிடுவார்.

அந்த சோகக்கதை தனி.

இப்போ LIVE STORY

அப்படி வெச்ச பெயருக்கு ஒரு பிரச்சினை தேசிய அளவில்.

யாரு இந்த வசந்பாலான்னு யோசித்தபடி

கோகுலிடம் (google) கேட்டேன்.

Vasan Bala is a writer and assistant director, known for The Lunchbox (2013), Raman Raghav 2.0 (2016) and Bombay Velvet (2015) என்று சொன்னது.உடனே அந்த ஆளுடைய பெயரை மாற்ற சொல்லவேண்டும்.நான் தான் சீனியர்.அவன் இன்னிக்கி வந்த சின்ன பைய.எப்படி அவனை மிரட்டி பெயரை மாற்ற வைக்கலாமுன்னு யோசித்தேன்.காந்தி சமாதியில் தியானம் செய்தபடி.

71 views0 comments

Recent Posts

See All

Comments


© 2018 by DirectorVasanthaBalan.com

bottom of page