ஒவ்வொரு முறை பழைய அலுவலகத்தை காலி செய்து விட்டு புது அலுவலகம் புகும் போது என்னுடன் ஒட்டிக்கொண்டே பழைய அலுவலகம் வந்துவிடும். புது அலுவலகத்தின் வாசலில் நிற்கும், உள்ளே அழைப்பேன் தயங்கியபடியே வாசலில் நிற்கும். புது அலுவலகத்தின் பிரமாண்டத்தைப் பார்த்து மயங்கி நிற்கும் போது பழைய அலுவலகத்தின் அழும் குரல் கேட்கும். செவிடனைப்போல அன்பை பேசும் கதையை யோசிக்கத்துவங்கிவிடுவேன்
இரவு வீடு திரும்பும் போது உதவி கேட்பவனை போல எழுந்து நிற்கும். மனைவியை அடித்து துரத்திவிட்டு புதுமனைவி தேடிக்கொண்ட காமுகக்கணவனை பார்ப்பதைப்போல என்னை பார்க்கும். சாப்பிட்டியா காசு எதாவது வேணுமா என்று கேட்பேன். அமைதியாக நிற்கும். ஒரு வார்த்தை பேசாது.
இப்படி ஒவ்வொரு நாளும் அது நிற்பதை பார்த்து கெஞ்சினேன் போகவில்லை ஆறுதலாக பேசி பார்த்தேன் போக மறுத்தது ஒருநாள் கோவப்பட்டு திட்டித்துரத்திவிட்டேன். மகனை பார்க்க வரும் தாயைப்போல துரத்தினாலும் மீண்டும் அலுவலக வாசலில் நின்று கருணை பொங்க என்னை பார்த்தபடியே இருக்கும்.
போலீஸ்ஸ்டேஷனில் சொல்லி மிரட்டிப் பார்த்தேன். கதைச்சொல்லி விட்டு தயாரிப்பாளரின் பதிலுக்காக அவரது அலுவலக வாசலில் காத்துக்கொண்டு நிற்கும் ஒரு இயக்குனரைப்போல
சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்வைப்போல ரத்தம் வழிய நிற்கும்
அவமானங்கள் தாங்கியபடி நிற்கும்
பழைய அலுவலகத்தில் நான் எழுதிய கதைகளை எல்லாம் தனக்குள் முணுமுணுத்தபடியே நிற்கும்.
அதை என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை பான் நம்பர் எடுத்துட்டு வா ஜிஎஸ்டி நம்பர் எடுத்துட்டு வா ஆதார் எடுத்துட்டு வான்னு அலையவிடலாமா என்று யோசித்தேன்
இறுதியில் சில ரோபோக்களை அழைத்து அதை கொன்று தர்மபுரி இளவரசனை போன்று ரயில்வே டிராக்கில் வீசி விட சொன்னேன்.
காலம் கடந்தது புது அலுவலகத்தில் நுழையும் போது என் அறையினுள் பழைய அலுவலகத்தின் நறுமணம் வீசியவண்ணம் இருக்கிறது . அதை நுகர்ந்தபடியே பழைய அலுவலகத்தை மறக்கத்துவங்கினேன்.
புதிய அலுவலகம் பிடிக்கத்துவங்கியது. அவ்வப்போது பழைய காதலை நினைவுப்படுத்தும் இளையராஜா இசையை போல பழைய அலுவலகங்கள் நினைவுக்கு வந்து வந்து மறைகின்றன. காதலி முகம் மறந்து போவதைப்போல
Komentáře