பெட்ரோல் பங்கில் காற்றடிப்பவர் எப்பொழுதும் உடல் ஊனமுற்றோராகவே இருக்கிறாரே ஏன்?
35 மற்றும் 25 என்ற இரண்டு எண்களை மட்டும் பார்த்தவண்ணம் கையில் ஒரு நீண்ட காற்றடிக்கும் குழாயை வைத்தவாறு ஓரே இடத்தில் அங்குமிங்கும் நாள் முழுக்க நடந்தவண்ணம் உள்ளார்
இரண்டு அல்லது நான்கு டயர்களுக்கு இடைப்பட்ட தூரத்தைத் தான் அவர்கள் வாழ்நாள் முழுக்க நீந்தி கடக்கிறார்கள்.
வாடிக்கையாளர்கள் சில்லறைகளை மட்டும் கையில் திணித்தவண்ணம் கடந்து செல்கிறார்கள். அந்த சில்லறையை எண்ணிக்கூட பார்க்காமல் வாங்கி தன் சட்டைப்பையில் போட்டுக் கொள்கிறார்.
பொதுவாக அவர் யாருடனும் பேசுவதில்லை. வாடிக்கையாளர்களும் அவருடன் எதுவும் பேசுவதில்லை.
அழும் குழந்தை தாய் அருகே வந்துடன் அவள் எதுவும் பேசாமல் தன் முலைப்பாலை தருவதைப்போல காற்றடிப்பவர் அருகே நாம் வாகனத்துடன் சென்றவுடன் எதுவும் பேசாமல் அவர் நம் வாகனங்களுக்கு காற்றடிக்கத் துவங்குகிறார்.
கிடைத்த சில்லறைகளை தவிர்த்து அவருக்கு வேறு ஏதேனும் சம்பளம் உண்டா இல்லையா என்று தெரியவில்லை.
ஓட்டல் ஊழியருக்கு டிப்ஸ் தரும் போது மட்டும் இன்முகத்தோடு தருகிறோம். காற்றடிப்பவருக்கு காசு தரும்போது மட்டும் ஒருவித கசப்போடு காசு தருகிறோம் அது தான் ஏன் என்று புரியவில்லை
காற்றடிப்பவரை உற்று பார்க்கும் போது வாயுபகவானாக எனக்கு தெரிகிறார்.
அவரது முகத்தில் எப்போதும் ஒரு வித துக்கம் சூழ்ந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் காற்று தன் துக்கத்தையெல்லாம் துரத்தி அடிக்கும் என்ற நம்பிக்கையோடு காற்றடித்தவண்ணம் இருக்கிறார்.
அவர் ஒரு கம்யூனிஸ்டாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் அவர் இரு சக்கர வாகனத்தையும் நான்கு சக்கர வாகனங்களையும் ஒன்றாக தான் பார்க்கிறார்.
காற்று சுழலுக்கு நடுவே சிக்கி தவிக்கும் காய்ந்த சருகாகவே நான் அவரைப்பார்க்கிறேன்.
காற்றடிப்பதை அவர் நிறுத்திவிட்டால் சருகு போல உதிர்ந்து விடுவார் என்றே தோன்றுகிறது
இவர்களை பார்க்கையில் அன்பை விட சிறந்த உணர்ச்சி ஒன்று உஷ் என்ற சப்தத்துடன் என்னை சுற்றி ரீங்காரமிடுகிறது
Comments