எங்கள் குரு இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர் ஷங்கர் அவர்களின் 1993 - 2018 / 25ம் ஆண்டு வெற்றிப்பயணத்தை உதவி இயக்குநர்கள் அனைவரும் இணைந்து ஜீலை 30ம் தேதி இரவு பிரபல நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினோம்.
எங்கள் இயக்குநரிடம் நான் வியந்த தொழில்நுட்ப அறிவை கதை ஞானத்தை பற்றி நான் முதலில் பேசத் துவங்கினேன். என்னைத்தொடர்ந்து அனைவரும் பேச அந்த உரையாடல் இரவு முழுக்க நீண்டு கொண்டே சென்றது. ஒரு வித பரவச அனுபவம். குருவுடன் எவ்வித தடையில்லாமல் உரையாடக்கிடைக்கிற உன்னத அனுபவம் ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஏற்பட்டது. இயக்குநரும் மிக இயல்பாக மனம்விட்டு உரையாடினார்.
இரவு 2 மணிக்கு இயக்குநர் அறிவழகன் உட்பட அனைவரும் அவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தனர். உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று... பாய்ஸ் படத்தின் பாடலில் வரும் விடையை பற்றியும் பேச்சு திரும்பியது. பாய்ஸ் திரைப்படத்தின் பாடலில் நேர்மை தான் வெற்றியின் ரகசியம் என்பதாக இருக்கும். எனக்கு நேர்மை தான் வெற்றியின் ரகசியம் என்பதில் நம்பிக்கையில்லை. நேர்மையாக இருக்கும் பலர் தோற்றுபோய் இருக்கிறார்கள். நேர்மையான படைப்புகள் பலதும் தோற்று போய் இருக்கின்றன.
முன்பு ஒரு முறை இயக்குநர்கள் கூடிய ஒரு சந்திப்பில் நான் நேர்மை தான் வெற்றியின் ரகசியம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறினேன். சந்திப்பில் உடன் இருந்த இயக்குநர் சசி,லிங்குசாமி என்னிடம் கோவம் கொண்டு கடும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
புத்திசாலித்தனம் தான் வெற்றியின் ரகசியம் என்ற என் பதிலை யாரும் அன்று ஏற்றுக்கொள்ளவில்லை,
இயக்குநர் கொண்டாட்ட நிகழ்விலும் பலர் சப்தமாக நேர்மை தான் வெற்றியின் ரகசியம் நீங்க சொன்னது வேதவாக்கு என்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
நீங்க சொல்வது தவறு என்பதைப்போல இயக்குநர் ஷங்கர் அவர்கள் அமைதி காத்தார். குழப்பினோம். நீங்க சொல்லுங்க சார் இன்னிக்கும் நம்புறீங்களா நேர்மை தான வெற்றியின் ரகசியம் என்று கேட்டப்போது இல்லை என்று மறுத்தார். அப்ப வெற்றியின் ரகசியம் என்ன என்று அனைவரும் ஆவலுடன் அவரை சூழ்ந்து கொண்டனர்.
டேய் பாலா ஒரு ரசகுல்லா எடுத்துட்டு வா என்று சொன்னார். ரசகுல்லாவை அவருக்கு கொடுத்தேன், அனைவரும் அந்த தேவ வார்த்தைக்காக தவம் கிடைந்தோம். மிக பொறுமையாக ரசகுல்லாவை சாப்பிடத்துவங்கினார். எங்களின் ஆவலை புன்முறுவலுடன் ரசித்தபடி சாப்பிட்டு முடித்தார்.
செயல் தான் வெற்றியின் ரகசியம் என்றார். கைத்தட்டல் பறந்தது. எப்படி என்று ஒரு உதவி இயக்குநர் கேள்வி எழுப்ப இடையறாத செவ்வனே செய்யப்படும் செயலே வெற்றிக்கு நம்மை இட்டுச்செல்கிறது. ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் நாம் நம்மை நம் மனதை மூளையை ஒருநிலைப்படுத்தி நாம் செய்யும் செயல் வெற்றி தான் என்று அவர் விளக்கம் கொடுக்க யாமத்தின் ஆயிரம் கதவுகள் திறந்ததை போல புதிய காற்று வீசியது. அவரை நாங்கள் மனதால் வணங்கினோம். குருதீட்ஷை
Comments