லட்சுமி சரவணக்குமார் எழுதிய கொமோரா நாவல் படித்து முடித்தேன். நவீன கிளாஸிக் வரிசையில் இடம் பெற வேண்டிய நாவல். அதன் உள்ளடக்கமும் எழுத்தாளரின் வசீகரமான மொழியும் நம்மை உள்ளே இழுத்து செல்கின்றன. காதல் கொள்ள வைக்கின்றன. காமுற வைக்கின்றன. உக்கிரம் கொள்ள வைக்கின்றன.
தென்தமிழகத்தில் வறுமையில் சிக்குண்ட குடும்ப அமைப்பு சிதைந்த கதிர் என்ற மனிதனின் கதை சிறு வயதிலிருந்து சொல்லப்பட்டுள்ளது. நாம் பேச தயங்குகிற சொல்ல கூசுகிற அத்தனை விசயங்களையும் மிக துணிச்சலாக எழுத்தாளன் அத்தனை வலிகளையும் குதத்தில் சொட்டும் ரத்தத்தையும் சேர்த்து நாவலின் பக்கங்களில் வழியவிடுகிறான்.
சக மாணவன் புணர்வதால் ஏற்படுகிற ரத்தம் நம் மனங்களில் விடுதிகளில் வசிக்கும் குழந்தைகளை பற்றி அச்சத்தை படர விடுகிறது.
சிறைச்சாலை பற்றிய பொது சித்திரம் நமக்கு திரைப்படங்கள் வாயிலாக சில நாவல்கள் வாயிலாக நமக்கு கிடைத்தாலும் சிறைச்சாலையின் உள்ளடுக்கு அதன் வியாபாரம் சம்மந்தமாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் காணக்கிடைக்கிற சித்திரத்தை நம்முன் பச்சை குத்துகிறான்.
காலம் முழுக்க வெண் தேவதைகள் தான் காதல் என்றால் தோன்றுகிற சித்திரம். இதயம் முரளியும் விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவும் தான் காதலின் புனித சித்திரங்கள் அதைத்தாண்டி எந்த கலைஞனும் யோசிக்கக்கூட இல்லை. சொல்ல கூசி தவிர்த்திருக்கிறார்கள்,
காம வாசனை அடிக்கத்துவங்கிய பெண்ணின் பின்னால் பித்துப்பிடித்தவனைப்போல பின் தொடர்ந்து சென்று அந்த பெண் தன் வீட்டை விட்டு எப்போது வருவாள் என்று அவள் வீட்டின் அருகே கால்களில் வேர் முளைக்கும் அளவிற்கு தவமிருந்து பல மணிநேரம் கழித்து வீட்டை விட்டு வெளி வந்த அந்த கிராமத்து பேரழகி சிறுநீர் கழித்து விட்டு உடனே வீட்டுக்குள் சென்று விடுகிறாள். அவள் சிறுநீர்கழித்த இடத்தில் கதைநாயகள் தன் பாதங்களை நனைய விட்டு காமத்தீயை அணைக்க முயல்கிறான் என்றொரு காட்சி. ஷேக்ஸ்பியரிஸம்
விழுங்க திணறுகிற காட்சி தான் ஆனாலும் காதலும் காமமும் பாடப்புத்தகங்கள் வரையறுக்கிற அளவிலா பயன்படுத்த வேண்டும்.
அடங்கா காமமும் தீரா காதலும் வெளிப்பட்டுள்ளது.
ஆணும் ஆணும் உதட்டோடு உதடு சுவைக்கிற காட்சியை எழுத்தாளன் எழுதி செல்லும் போது அந்த சுவை எதை ஒத்ததாக இருக்கும் என்று உணர்ச்சி மொட்டுகளை உருவாக்கியவண்ணம் இருக்கிறது.
மலம் கழிக்கும் போது ஆண்குறி ஒரு பெண்ணை நினைத்து விரைப்பதையும் அப்போதே சுயமைதுனம் செய்வதை மிக தைரியமாக லட்சுமி எழுதியுள்ளான்.
கட்டுப்படுத்தப்பட்ட அத்தனை இலக்கணங்களும் அழகியல் உணர்ச்சிகளும் குப்பைகளாக காட்சியளிக்கின்றன. பார்க்கிற பெண்ணை எல்லாம் புணர வேண்டும் என்கிற எண்ணமுடையவனாகத்தான் நான் இருக்கிறேன் என்பதை கதைநாயகன் சொல்லும் போது அட என்று அவனை திரும்பி பார்க்க வைக்கிறது. ஆமாம் நான் ஒரு பிம்ப் என்று சொல்லும் போதும் ஜி நாகராஜனை படித்துக்கொண்டிருப்பதைப்போல தோன்றுகிறது.
தமிழில் இது முக்கியமான புதினம்.
லட்சுமிக்கு என் வாழ்த்துக்கள்
உன் முந்தைய புதினங்கள் தராத நெருக்கத்தை அன்பை கண்ணீரை காமத்தை உக்கிரத்தை நஞ்சை இது உமிழ்ந்த வண்ணம் இருந்தது.
Komentáře