பணக்காரச்சிறுவர்களின் உடைகளையும் விளையாட்டுப் பொருள்களையும் பார்த்து பொறாமையும் ஏக்கமும் கொண்ட சிறு வயதில் என் எதிர் வீட்டில் இருந்த ஒரு மாமா சொன்னார். கம்யூனிசம் மட்டும் வந்துவிட்டால் இந்த நாட்டில் அத்தனையும் சமமாகிவிடும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும். ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் போய்விடும். அது எப்ப மாமா வரும் என்று கேட்டேன். ரஷ்யா என்கிற நாட்டில் அது வந்து விட்டது.
அத யாரு மாமா கண்டுபிடிச்சா என்று கேட்டேன்,
லெனின்,காரல் மார்க்ஸ் என்ற புரியாத பெயர்களை சொல்லி தன் வீட்டில் மாட்டியிருந்த லெனினின் புகைப்படத்தை காண்பித்தார். அந்த சிறுவயதிலிருந்து என் மனதில் லெனின் ஒரு ஹீரோவாக உருவெடுத்தார். மெல்ல மெல்ல கம்யூனியச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு கடவுள் மறுப்பு கொள்கையை கடைப்பிடிக்க முயன்றேன். சினிமாவின் அழுத்தத்தில் இன்று முடியாமல் திணறுகிறேன் அது வேற விசயம்.
ரஷ்யாவில் கம்யூனியஸ கொள்கைகள் வீழ்ந்த போது அதிர்ந்தேன். ஆனால் அது நல்லதொரு கனவாய் இன்னும் என் நெஞ்சில் உள்ளது. ஆனால் கம்யூனிஸ தோழர்கள் என்றும் அறத்தின் பக்கம் இருந்து குரல் கொடுத்தபடியிருப்பார்கள்.
முதலாளித்துவத்திற்கு எதிராக உழைப்பு சுரண்டலைக் கண்டித்து ஒரு குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
அந்த குரலின் ஒரு பகுதி தான் என் அங்காடித்தெரு.
ஆனால் இன்று இந்தியாவில் லெனின் சிலை இடிக்கப்படுகிறது.
அந்த புல்டோசர் தொழிலாளியின் கூலிக்காகவும் தான் லெனினின் குரல் ஒலித்தது. லெனின் என்பது தனி மனிதன் அல்ல. அது அறத்தின் தத்துவம். என்றும் தன்னிலை நொறுங்காத தளர்வடையாத உருக்குலையாத தத்துவம். உழைப்பு சுரண்டலுக்கு எதிரான ஒரு எறும்பின் குரல். சிலையை உடைக்கலாம் ஆனால் அந்த தத்துவம் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் உள்ளத்தில் உறைந்து கிடக்கிறது.
மனித வாழ்வியலில் கலந்து செல்ல வேண்டிய ஒரு சித்தாந்தம், வெறும் வண்ணத்திற்கு மட்டுமே உயிர் வாழ்கிறது. பாவம், அதற்கு கூட மறந்து விட்டது, அது வண்ணம் அல்ல, பல தோழர்களின் குருதி கொடை என்று ✍️