top of page
Writer's pictureVasantha Balan

ஒட்டகத்தைக்கட்டிக்கோ

பொதுவாக இயக்குநர்கள் திரைப்படம் எடுப்பதில் சமரசம் செய்யவே கூடாது என்று டால்ஸ்டாயின் விதி ஒன்று இருக்கிறது என்று கோடம் பாக்கத்து கிளிகள் உரக்க சொல்லிவிட்டு செல்லும். அவைகள் தேநீர்கடைகளில் நின்று கொண்டு மணிக்கணக்காக அறிவுரைகள் வழங்கும். சமரசம் படத்தினுடைய உயிர்நாடியை சிதைக்கும் விசயம்... தயாரிப்பாளர்கள் சொல்லி விட்டு போய் விடுவார்கள் நாம் தானே படம் சரியாக வரவில்லையென்றால் அதே தயாரிப்பாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஆகவே கதையை சமரசமின்றி நிறைவேற்ற அடம் பிடிப்பது நல்லது. இயக்குநர் ஆகாலா, குமீர்கா எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு ஷாட் அல்லது இரண்டு ஷாட்கள் தான் எடுப்பார்கள். அதனால் தான் அந்த படம் தரத்துடன் வருகிறது என்று சினிமாவில் அறிவுஜீவிகள் சாலிகிராமத்தில் நம்மை வெயிலில் நிற்க வைத்து போதனை செய்வார்கள். ஏற்கனவே நாம் குழம்பி போய் நிற்போம்.

பசியோடு வறுமையோடு இருக்ககிறவன்கிட்ட இருந்து தான் நல்ல கதை வரும் தெரியுமா என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி புது திருக்குறள் வாசிக்க துவங்குவார். அது எப்படின்னு கேக்க அந்த இயக்குநர் 1980 ம் ஆண்டு என்ன அற்புதமான கதையோடு வந்தாரு இப்ப என்னகதையை எடுக்குறாரு. இப்ப தெரியுதுல்ல என்று சொல்வார். மறுத்து பேச முடியாது ஏனெனில் அவரிடம் போனமாச வாடகைக்கு கொஞ்சம் கைமாத்தாக பணம் வாங்கியிருந்தேன். நீங்க சொல்றது தான் சரிண்ணே என்று சொல்வேன்.

அண்ணே அன்னைக்கு ஒரு தயாரிப்பாளர் இருக்கிறாருன்னு சொன்னீங்களே மீட் பண்ணலாமாண்ணே என்று கேட்க அவர் அடுத்த மாதம் மலேசியால இருந்து வர்றாரு மொத்தம் பத்து படம் பண்ண போறாரு உனக்கு ஒரு படம் கண்டிப்பாக என்பார். நன்றிண்ணே. ஆனால் வெயில் மாதிரி கிராமத்து படம் தான் இருக்கனும். சரிண்ணே என்று சொல்ல வாங்கித்தந்த டீயின் பித்தம் தலைக்கேறியது.

சமரசம் நான் ஜென்டில்மேன் திரைப்படத்தில் கடைசி உதவி இயக்குனர். படத்தில் வருகிற ஒட்டகத்தைக்கட்டிக்கோ பாடலை ஒலிப்பதிவு செய்தாகிவிட்டது. ராஜஸ்தான் பாலைவனத்தில் 200 ஒட்டகங்களுடன் படத்தின் கடைசியில் அந்த பாடலை படமாக்கிக்கொள்ளலாம் என்ற கணக்குடன் என் குரு இயக்குநர் ஷங்கர் அவர்கள் முடிவு செய்து வைத்திருந்தார். பாடலுக்கான படப்பிடிப்பு தேதி நெருங்க பாடலுக்கான கதாநாயகன் கதாநாயகிகள் உடைகள் எல்லாம்தயாராகி விட்டன. ராஜஸ்தான் லொகேஷன் பார்க்க போகவேண்டும் பிளைட் டிக்கெட் போடுங்க என்று தயாரிப்பு நிர்வாகியிடம் இயக்குநர் சொல்ல தயாரிப்பாளர் முடியாது என்கிறார் என்ற பதில் வந்தது. சரி பிளைட் டிக்கெட் போட யோசிக்கிறார்கள் ரயில் டிக்கெட் போடுங்க என்று இயக்குநர் சொன்னார். மீண்டும் தயாரிப்பாளர் தரப்பிடம்இருந்து மறுப்பு வந்தது.

அதிர்ச்சியான இயக்குநர் தயாரிப்பாளரை பார்க்க சென்றார். இங்க பாருங்கோ ஷங்கர் படத்தோட பட்ஜெட் எதிறிடுச்சு இனிமே என்னால பணம் செலவழிக்க முடியாது.இந்த பாட்டு இல்லைன்னா படம் ஒன்னும் கெட்டு போயிராது.பாட்டு இல்லாமையே படத்தை நான் ரீலீஸ் பண்ணுவேன் என்று தயாரிப்பாளர் குஞ்சுமோன் கடுமையாக சொல்லிவிட்டார். இயக்குநர் கலங்கிவிட்டார். பேச்சு வார்த்தை தொடர்ந்தது. அத்தனையும் தோல்வியடைந்தது. ஒட்டகத்தைக்கட்டிக்கோ பாடல் வெளியாகி பயங்கரமான வெற்றியடைந்து இருந்தது. அதனால் அது படத்திற்கு இன்னும்பலம் சேர்க்கும் என்று இயக்குநர் நம்பினார். ராஜஸ்தானில் சூட்டிங் ஒட்டகங்கள் டான்ஸர் பில் அது இதுன்னு தாலி அந்துரும் என்னால முடியாது ராஜஸ்தான்ல தான் பண்ணனுமுன்னா ஒங்க காச போட்டு பண்ணிக்கோ சென்னையில இந்த பாட்ட எடுக்கமுடியுமுன்னா நான் செலவு பண்றேன்னு தயாரிப்பாளர் பாடலை எடுக்காமல்இருக்க இடியாப்ப சிக்கல் வைத்தார்.

எப்படியாவது சென்னையிலாவது இந்த பாடலை எடுத்து விட வேண்டுமென்று இயக்குநர் குழு விவாதிக்க துவங்கியது.அப்போது இருந்தே ஒரு உதவி இயக்குநர் கட்டையை போட்டுகொண்டே இருந்தார்.

ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள செந்நிற கரடுமுரடுப்பகுதி பாடல் படம் பிடிக்க முடிவானது.

"ஒட்டகம் இல்லாமல் ஒட்டகத்தைக்கட்டீக்கோன்னு எப்படி " அந்த உதவி இயக்குனர் பொறுமுகிறார்.

"ஷங்கர் ஒட்டகமுன்னு லிரிக் எழுதிட்டு ஒட்டகம் இல்லாமல் எப்படி? அப்பறம் ரகுமான் வைரமுத்து எல்லாம் காறி துப்புவாங்க" ன்னு அவர் பேச...

அங்கு வந்த இணை இயக்குநர் "மூடிட்டு போடா...ஷங்கர் மியூசிக்கோட பீலிங்ல இதெல்லாம் ஞாபகம் வராது...இவனெல்லாம் குரோசவாக்கு சித்தப்பன் இவன் சொல்றத கேக்காதீங்க"ன்னு இயக்குநரை அந்த பக்கம் இழுத்து சென்றார்.

சமரசத்துடன் படப்பிடிப்பு துவங்கியது. இன்னொரு இடி இறங்கியது அந்த பாடலுக்கு நடனம் அமைக்க ஒப்பந்தம் செய்த நடன இயக்குநர் சுந்தரம் அவர்கள் ஏதோ வேலை காரணமாக தொடர்ந்து பங்கேற்க இயலாமல் நடன இயக்குநரான தன் மகன் ராஜீ சுந்தரத்தை விட்டு விட்டு சென்று விட்டார். இயக்குநர் ஷங்கர் சார் விதிய பாருடா என்பது போல உணர்வற்று நின்றார்.

ஒட்டகம் இல்லாமல் முதிர்ந்த நடன இயக்குநர் சுந்தரம் அவர்கள் இல்லாமல் குதிரையுடன் படப்பிடிப்பு துவங்கியது.

படப்பிடிப்புக்கு வந்த குதிரையை இயக்குநர் ஷங்கர் அவர்கள் தடவி கொடுத்தபடி இருந்தார்.

உனக்கு குதிரை என்று பெயர் வைத்தது யார் உனக்கு நான் ஒட்டகம் என்று பெயர் சூட்டுகிறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டார் போலும். அவர் சொன்னதை உணர்ந்து கொண்ட குதிரை ஒரு சிலுப்பு சிலுப்பியது.

இயக்குநர் ஷங்கர் சாரின் கண்களில் வழிந்த கண்ணீரை யாரும் பார்த்து விடாமல் ரகசியமாக அவரே துடைந்து கொண்டார்.

அவர் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர்த்துளி வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட அதல பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது. இன்றும் அது ஈரப்பதம் குறையாமல் மினுங்கிக்கொண்டிருக்கிறது.



105 views0 comments

Recent Posts

See All

Comentarios


bottom of page