எழுத்தாளர் பாலகுமாரன்

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவு செய்தியை கேட்ட போது ஒரு நிறைவான பயணத்தை முடித்து விட்டு ஒரு ஆத்மா பயணித்திருப்பதாக உணர்ந்தேன். 9ம் வகுப்பு படிக்கும் ஏதேச்சையாக கையில் கிடைத்த இரும்புக்குதிரைகள் நாவல் என்னை அவர் எழுத்துகள் பால் பித்து கொள்ள செய்தது.பாலகுமாரன் நாவல்களை தேடி தேடி படித்து அவரின் அடிபொடியாக ஆன காலம்.அப்போது திரைக்கு வந்த குணா படத்தைப் பார்த்து போது அதில் நான் கமலை பார்க்கவில்லை பாலாவை தான் பார்த்தேன்.கல்லூரி படித்த காலமது.கல்லூரியே குணா படத்தை இகழ்ந்த போது பாலா மீது இருந்த கிறக்கத்தால் பலரிடம் கடுமையான சண்டையில் ஈடுபட்டேன்.என் புத்தக அலமாரியில் பாலகுமாரன் படத்தை பென்சில் ஓவியமாக வரைந்து வழிபடத்துவங்கினேன்.ஜென்டில்மேன் திரைப்படத்தில் அவரை சந்தித்தது போது கடவுளை கண்டதாக உணர்ந்தேன். அவர் சொல்ல சொல்ல நான் வசனங்களை எழுதியுள்ளேன்.இரண்டு நாவல்களை அவர் சொல்ல சொல்ல எழுதியுள்ளேன். காட்சிகளை எப்படி உருவாக்க வேண்டும் என்று திருச்சி வீதிகளில் அதிகாலை நடை செல்லும் போது கற்று கொடுத்தார்.ஒரு விதத்தில் இலக்கிய நுழைவாயிலில் எனக்கு கிடைத்த ஞானத் தகப்பன்.வானுலகில் திஜாவுடனும் சுஜாதாவுடனும் உங்கள் பயணம் துவங்கட்டும். இரும்பு க்குதிரைகள் நாவலில் வரும் இந்த கவிதை நினைவுக்கு வருகிறது . சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத் தெரியாக் குதிரை கண்மூடி வலியை வாங்கும் இதுவுமோர் சுகம்தான் என்று கதறிட மறுக்கும் குதிரை கல்லென்று நினைக்க வேண்டாம் கதறிட மேலும் நகைக்கும் உலகத்தை குதிரை அறியும்