top of page
Writer's pictureVasantha Balan

ஆண்பால் பெண்பால் அன்பால்


பதின்வயதில் இருந்தே நிறைய எழுத வேண்டும்; அது பத்திரிகையில் வர வேண்டும் என்ற ஆசை எனக்கு மிக அதிகம். அதற்கென, நிறைய வாசகர் கடிதங்கள் எழுதிப் புகழ்பெற்றவரான விருதைராஜாவைச் சந்தித்தேன். ``முதலில் வாசகர் கடிதம் எழுதிப் பழகுங்க’’ என்று அவர் அறிவுரை கூறினார். என் முதல் வாசகர் கடிதம் ஜூனியர் விகடனில் வந்தது. அதற்குப் பிறகு எல்லா பத்திரிகைகளுக்கும் ஏராளமான கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன். ஒரு பத்திரிகைக்கு `உங்கள் பத்திரிகையின் அட்டைப்படம் அத்தைமகள் கன்னம்போல மின்னுகிறதே’ என்று எழுதி அனுப்பியிருந்தேன். அதை அந்தப் பத்திரிகை வெளியிட்டது.

பக்கத்துவீட்டுப் பெண்கள் அதைப் படித்துவிட்டு என் அம்மாவிடம் ``இப்பவே பாலனுக்கு அத்தைமக கன்னம் மின்றதெல்லாம் தெரியுதே’’ என்று கொளுத்திப்போட அம்மா ஆங்காரமானாள். வீடே கொதித்து எழுந்தது. ``இந்த மாதிரி எழுதிக்கிட்டு இருந்தே கொன்னுடுவேன்... கவிதை எழுதி வெச்சிருக்கிற டைரி எல்லாத்தையும் அடுப்புல போட்டு எரிச்சிடுவேன். பிஞ்சுல பழுத்துடுச்சு சனியன்’’ என்று திட்டித்தீர்த்தாள். வாசகர் கடிதத்துக்கே இப்படி ஓர் எதிர்வினை என்றால், காதல் கடிதத்துக்கெல்லாம் வீட்டாரின் எதிர்வினையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

எங்கள் ஊர் நன்றாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்ட ஊர். ஊருக்குத் தெற்கே பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடக்கே ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கிழக்கே ஆண்கள் கல்லூரி, மேற்கே பெண்கள் கல்லூரி... எப்படித் திட்டம்? இப்படி ஆணும் பெண்ணும் எந்த வகையிலும் நேருக்கு நேர் சந்தித்துவிடக் கூடாது என்று திட்டமிட்டுப் பெரியவர்கள் உருவாக்கிய ஊர் என்னுடையது. இருபாலர் சேர்ந்து படிக்கிற பள்ளியோ, கல்லூரியோ 1992- ம் ஆண்டு வரை ஊரில் கிடையாது. சைட் அடிக்க எப்போதாவது பெண்கள் பள்ளி அருகே ஒதுங்குவோம். அங்கே உள்ள டீக்கடையில் நின்றுகொண்டிருப்போம், ``யே தம்பி... நீ இ.பி சாமிப் பையன்தான? இங்க என்ன நிக்கிற?’’ என்று நிற்கவிடாமல் பெரியவர்கள் விரட்டிவிடுவார்கள். பக்கத்து வீட்டுப் பெண்களிடம் பேச அம்மா அப்பாக்கள் தடை. வெளியே பேச ஊரே தடை. பெண்களைப் பார்ப்பதுகூட குற்றம்!

கடலினைப் புரிந்துகொள்ள மீனாக மாற வேண்டும். மழையை அறிந்துகொள்ள தவளையாக மாற வேண்டும். பெண்ணைப் புரிந்துகொள்ள பெண்ணாகத்தான் மாற வேண்டும். நமக்கு வேறு வழிகள் இல்லை தோழர்களே... அப்படி மாறாமல் ஆண்பால் பெண்பாலை அன்பால் புரிந்துகொள்வது என்பதே புனைவுதான். காரணம், இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே எழுப்பியிருக்கிற மாயப்பெருஞ்சுவர் அத்தனை வலிமையானது!

என் பால்யத்தோழி மாரியம்மாள் வயசுக்கு வந்தாள். அவளை எங்கள் கண்களில் காட்டாமல் ஒரு வாரம் மறைத்து வைத்திருந்தார்கள். ஒரு வாரம் கழித்து அவளைப் பார்க்கும்போது, பாவாடை தாவணியெல்லாம் அணிந்து தேவதையாகத் தெரிந்தாள். அவளும் சிரித்தாள். நானும் சிரித்தேன். அவள் தீப்பெட்டி ஒட்டுவாள். அப்படி ஒட்டும்போது யாருமில்லாத நேரமாகப் பார்த்து அவளிடம் தனிமையில் பேசுவேன்.

“நீ வயசுக்கு வந்துட்டேன்னு சொல்றாங்க. அப்படின்னா என்ன?”

அவள் ``யார்கிட்டவும் சொல்ல மாட்டேல்ல’’ என்று கேட்டாள். சத்தியம் செய்தேன்.

``ஒண்ணுக்கிருக்கிற எடத்துல இருந்து ரத்தமா வரும்’’ என்று சொன்னாள். நான் அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருந்தேன்.

``வயசுக்கு வந்த பொம்பளப் புள்ளகிட்ட என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு உனக்கு’’ என்கிற அம்மாவின் குரல் மீண்டும் விரட்டியது. அதன் பிறகு பெண்களிடம் இப்படி எல்லாம் பேசுகிற உரிமை என்னிடமிருந்து பறிக்கப்பட்டது.

இருந்தாலும் பெண்களைப்பற்றித் தெரிந்துகொள்கிற ஆர்வம் மட்டும் அணையவே இல்லை. அதனால் பெண்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நூலகம் சென்று பல்வேறு புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனாலும் அது எதுவுமே எதையுமே கற்றுத்தரவில்லை. ``குழந்தை எப்படிப் பொறக்கும்டா…’’ என்று என் நண்பனிடம் கேட்டேன். ``தொப்புள் வழியா செக்ஸ் பண்ணிக்கிட்டா, தொப்புள் பிளந்து குழந்தை வெளியே வரும். அதான் தொப்புள் கொடி’’ என்றான். நானும் அதையே உண்மை என்று பல ஆண்டுகள் நம்பினேன். ஆனால், அது அப்படி இல்லை என்கிற உண்மை தெரிந்தபோது, நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன்.

ஊரில் பெண்கள் மட்டும் சேர்ந்து ஆடி மாதங்களில் செவ்வாய்க்கிழமை இரவுகளில் ரகசியமாக சாமி கும்பிடுவார்கள். `சொம்பில் தேங்காயை வைத்து அதன்மேல் புங்கை புளிய இலை வைத்து அனைத்துப் பெண்களும் அவ்வையாரைக் கடவுளாக நினைத்துக் கும்பிடுவார்கள். இரவெல்லாம் கதை சொல்வார்கள்’ என்று கேள்விப்பட்டிருக்கிறேன். `அசந்தா ஆடி, மறந்தா மாசி, தப்புனா தையில சாமி கும்பிடணும்’ என்பார்கள். உப்பில்லாத கொழுக்கட்டை செய்து சாப்பிடுவார்களாம். அதை ஆண்களுக்குச் சொல்லவோ கொழுக்கட்டையைத் தின்னவோ தர மாட்டார்கள். பலநேரம் என் தோழி தின்னும் போது என்ன கொழுக்கட்டை என்று கேட்பேன். ``ச்சீ போ... இதெல்லாம் ஆம்பளப் பசங்களுக்கு தரக் கூடாது. பொம்பளைங்களுக்கு மட்டும்தான்’’ என்று சொல்வாள். அந்த இரவு பெண்கள் சாமி கும்பிடுவதைப் பார்க்க நாங்கள் மிகவும் பிரயாசைப்படுவோம். ஆனால், இதுவரை அந்தப் பூஜையைப் பார்த்ததில்லை.

மாரியம்மாளிடம் அதன் பிறகு நான் பேசவே இல்லை. பார்த்தால் சின்னப் புன்முறுவல் மட்டும்தான். அதன் பிறகு சென்னைக்கு வந்து உதவி இயக்குநராக ஆகிவிட்டேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு ஊருக்குப்போனபோது பார்த்தேன்.அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. அவள் தீப்பெட்டி ஒட்டிய படியே இரண்டு மார்பகங்களையும் திறந்து போட்டுத் தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். கடந்துபோன என்னை நிறுத்திப் பேசினாள். தன் மார்பகங்கள் திறந்து கிடப்பதையோ அதை நான் பார்ப்பதையோ பற்றிப் பிரக்ஞையின்றி இருந்தாள். சகஜமாக என்னிடம் என் தொழில் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள். அவள் சடங்கான போதெல்லாம் ஒரு விநாடிக்கு 100 முறை தாவணியை மார்புக்குமேல் இழுத்துவிட்டுக் கொண்டேயிருப்பாள். இப்போது அது பற்றிய எந்த அக்கறையும் அவளுக்கு இல்லை.உண்மையில் பெண்ணை அவளுடைய உடலை, மனதைப் புரிந்துகொள்வது அத்தனை சுலபமல்ல.

நினைவு தெரிந்த நாள் தொடங்கிப் பெண்கள் ஒரு புதிராகவே வளர்ந்துகொண்டிருந்தார்கள். புதிருக்குள் புதிர்... புதிருக்குள் நுழையா முடியாத மா புதிர். எப்பாடுபட்டாவது அந்த மா புதிருக்குள் நுழைய முடிந்தாலும் வழி தவறுகிற புதிராக...

அம்மாவிடம் பால் குடித்த காலம் எனக்கு நினைவில்லை. அப்போது விலகிய பெண்ணின் அருகாமை அதன் பிறகு எனக்கு எப்போதும் ஏற்படவில்லை. இதனால் ஒரு பெண் பேசும் போது கண்கள் தானாக அவளின் மார்பகங்களைப் பார்க்க விளையும். அதைத்தாண்டி பெண்களின் கண்களைப் பார்த்துப் பேச முடியாது. அதனால் எங்கேயோ பார்த்துக்கொண்டே பெண்ணிடம் மொத்தமும் பேசிமுடிக்க வேண்டும். அதைத்தாண்டி ஒருமுறையேனும் அவள் மார்பகங்களைப் பார்த்துவிடுவது தடையை மீறி நிகழ்ந்துவிடும். அதை எதிரில் உள்ள பெண் உணர்ந்து தன் மாராப்பை இழுத்துவிடுவாள்; ஓர் ஆணாக அவமானமாக இருக்கும் எனக்கு. இன்றுவரை அந்த அவமானம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

யாராவது பெரிய பதவியில் இருக்கும் பெண்ணைப் பார்க்கப்போகும்போது எனக்குள் ஆயிரம்முறை சொல்லிக்கொள்வேன்; கண்ணைப் பார்த்துதான் பேச வேண்டும், அதைத்தாண்டிக் கீழே போகக் கூடாது என்று... என் போன்ற தெக்கத்தி ஆணின் ஆகப்பெரிய வேதனைகளில் இதுவும் ஒன்று. சென்னை வந்தபிறகும்கூட பெண்களுடன் சிநேகம் ஏற்படவில்லை. அதனால் சினிமாக்கள் பெண்கள் பற்றி எனக்குள் ஏற்படுத்திய உருவகங்களில் மூழ்கிக் கிடந்த காலம்தான் அதிகம். திரைப்பாடல்களில் காமம் ததும்பும் மாங்கனிதான் பெண். நான் பார்த்த ஒவ்வொரு திரைப்படமும், பாடல்களும், நடனமும் திரும்பத் திரும்பத் திரும்ப என்னிடம் வலியுறுத்தியது ஒன்றைத்தான், ஆண் புசிப்பதற்காகவே பெண் படைக்கப்பட்டிருக்கிறாள். திருமணமான பிறகுதான் பெண்ணின் நெருக்கத்தை அவர்களுடைய அக உலகத்தை உணர ஆரம்பித்தேன்.

சில நாள்களுக்கு முன்பு பெண்கள் குறித்த ஓர் ஆவணப்படம் பார்த்தேன். அதில் பல பெண்கள் மாதவிலக்கின் துயரங்களைக் குறித்துப் பேசியிருப்பார்கள். அதில் ஒரு பெண் “எங்க வீட்டுல பேடு வாங்கக் காசு இருக்காது, அப்போ போர்வையைக் கிழிச்சு வெச்சிட்டு காலேஜூக்குப் போவேன். அதைத்தாண்டி ரத்தம் வடிந்து, சுடிதாரின் பின்புறமெல்லாம் ஒட்டிடும். துப்பட்டாவை எடுத்துப் பின்னாடி கட்டிப்பேன். அழுகையா வரும். என் மாதிரி உடன் படிக்கும் தோழிகளுக்கும் நடக்கும். தினம் கல்லூரிக்கு பஸ்ல போகணும். அந்த மூன்று நாள்கள்ல உட்கார இடம் கிடைச்சா, வரம் கிடைச்ச மாதிரி.கையில ஒரு நியூஸ் பேப்பரையும் வெச்சிருப்போம்.நாங்க உட்கார்ந்த சீட்டில், எங்களின் சுடிதாரைத் தாண்டி அந்த சீட்டு முழுக்க ரத்தம் பட்டுடும். ஊர்வந்து எழுந்துகொள்ளும்போது கையிலிருந்த பேப்பரை எடுத்து, அந்த சீட்டைத் துடைத்து விட்டு எழுந்து போவோம். அசிங்கமாக இருக்கும்.அதுக்காகக் கருப்பு சுடிதாரைத்தான் நானும் தோழிகளும் அதிகம் வாங்குவோம்” என்று பேசினாள். அந்தப் பெண்ணின் வேதனை பல இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் தொந்தரவு செய்திருக்கிறது.

கார்த்திக் முத்துக்குமார் இயக்கிய `ON DUTY’ என்ற ஒரு குறும்படம் முக்கியமானது. முதல்வர் வருகைக்காக நெடுஞ்சாலையில் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண் காவலர், நீண்ட நேரம் கழித்து சாலை ஓர கருவேலஞ்செடிகளுக்கு மறைவில் சென்று, பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சானிட்டரி நாப்கினை மாற்றப்போவாள். சைரன் சத்தம் கேட்கும், நாப்கினை மாற்றாமல் மீண்டும் பேன்ட்டில் வைத்துவிட்டு ஓடி வருவாள். நெஞ்சை உறைய வைத்த குறும்படம் அது.

ஒருநாள் ஏதோ ஓர் உலகத்திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. கதாநாயகிக்கு மாதவிலக்கின்போது அதிக ரத்தப்போக்காகி கணவனை போனில் அழைப்பாள். கதாநாயகன் வேகமாக காரில் வந்திறங்கிக் கதவைத் தட்டுவான். கதவு திறந்த பாடில்லை. ஒருவழியாக அவன் மனைவி கதவைத் திறப்பாள். வீடெல்லாம் ரத்தம். அவள் உடையெல்லாம் ரத்தம். “எனக்கு என்னமோ செய்யுது” என்று கூறிவிட்டு மயக்கமாகிறாள்.மருத்துவமனையில் சேர்க்கிறான். ஆறு மாதமாக மாதவிலக்கு ஆகாமல் இருந்திருக்கிறது. சிகிச்சைகள் அளித்தபிறகு, `பயப்பட ஒண்ணு மில்லை. நாளைக்கே வீட்டுக்குப் போகலாம்’ எனப் பெண்மருத்துவர் ஆறுதல் கூறுகிறார்.

கதாநாயகன் ஆடை முழுக்க ரத்தம். கதாநாயகியை மருத்துவமனையில் விட்டுவிட்டு அந்த ரத்தக்கறை படிந்த சட்டையுடன் வீட்டுக்கு வருகிறான். ரத்தத்தின் நாற்றம் குடலைப் பிடுங்குகிறது. அவன் வீட்டை கிளீன் பண்ணத் துவங்குகிறான். அந்தத் தூமை என்று சொல்கிற மாதவிலக்கு ரத்தம் மலக்குவியல் மாதிரி ரத்தக்குவியலாக வீடெங்கும் இருக்கிறது. மூக்கைப் பொத்திக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்கிறான். என்னை அதிரவைத்த காட்சி அது.

அன்று இரவு என் மனைவியைக் கட்டிப் பிடித்து,``கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே’’ என்ற பாடலைப் பாடினேன். என்னை அறியாமல் கண் கலங்கியது. ``இவ்வளவு கஷ்டமாடி உங்களுக்கு?’’ என்று கேட்டேன். ``ஆமாங்க செத்திடலாமுன்னு தோணும்’’ என்றாள். ``அழறீங்களா?’’ என்று கேட்டாள். ``இல்லடி அவ்வளவு கோவமாயிருக்கு, ஏன் இதை மறைக்கிறீங்க ? ஆணுக்கு இதுதான் பெண்ணின் வலின்னு தெரிஞ்சிட்டா, இங்கே இந்தப் பாலின பேதம்லாம் இருக்காதுல்ல...’’ என்றேன். ஒரு சின்ன எதிர்பார்ப்புதான்.

பெண் பிரதமர், ஏராளமான பெண் முதல்வர்கள், பெண் ஜனாதிபதி ஆண்ட, இப்போதும் ஆளுகிற நாடுதான் நம்முடையது. ஆனால், இங்கே வேலையில் இருக்கும் பெண்களுக்கு, அந்த மூன்று நாள்களுக்குக் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்பது இன்னமும் கானல்நீராகத்தான் இருக்கிறது.

சிறுவயதிலிருந்தே ஒவ்வொரு ஆணுக்கும் மாதவிலக்குப் பற்றிச் சொல்லித்தர வேண்டும். அப்படி வளர்கிற ஓர் ஆணுடைய மனநிலை, பெண்ணை வெறும் போகப்பொருளாக, அழகுப்பதுமையாக, உடலுறவுக்கான கருவியாக மட்டுமே பார்க்காது.

என் 42 வயதில் புரிந்தது, பதின் வயதிலே புரிந்திருந்தால், பெண்ணை இன்னும்கூட அன்போடு, சிநேகமாய், தோழமையாய் பார்க்கிற பார்வை வந்திருக்கும். அவர்களோடு இயல்பாகப் பழகுவதும்கூட சாத்தியப்பட்டிருக்கும்.

மாதவிலக்குக் குறித்த விழிப்பு உணர்விலிருந்து தான் ஆண்-பெண் சமத்துவம், புரிதல் முதலான அத்தனையும் துவங்குகிறது. அது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெற்றோர்கள்வழித் துவங்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். மூத்தவர்கள் பெண்ணுடல் எதிர்கொள்ளும் இந்தச் சிக்கலைப் பற்றித் தெளிவினை ஆண் குழந்தைகளுக்குப் பரப்ப வேண்டும்.

ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து அவள் முழு பெண்ணாக மாறி தாய்மையடைந்து மெனோபாஸ் வரை அவளுக்கு ஏகப்பட்ட உடல்நிலைகள் மாற்றங்கள் நிகழும்.பெண் பூப்படையும்போது, மார்புகள் வளரும்போது, மாதவிலக்கின்போது, திருமணத்தின்போது ஏற்படும் மனநிலைச் சிக்கல்கள். பிறந்த வீட்டில் வளர்ந்த மரத்தை வேரோடு பிடுங்கி, வேறோரு இடத்தில் நடுவதைப்போல, கணவன் வீட்டுக்கு நீ போக வேண்டும் என்பது ஏன்? இங்கே எந்த ஆணும் வீட்டோடு மாப்பிள்ளையாகப் போகச் சம்மதிப்பதில்லை. அப்படி ஓர் ஆண் விரும்பாத ஒரு விஷயத்தை, பெண் மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விதிகளை வகுத்திருக்கிறது சமூகம்.

கர்ப்பம் தரிக்கும்போது, கருச்சிதைவு ஏற்படும்போது, குழந்தை உண்டாதல் தள்ளிப் போகிறபோது, சுகப்பிரசவ வேதனைகள், அறுவைசிகிச்சைப் பிரசவம் தருகிற உடல் பருமன், முதுகுத்தண்டில் தொடர்ந்து வருகிற வலி, தைராய்டு போன்ற பிரச்னைகள், மார்பகங்களில் பால் சுரக்கத் துவங்கும்போது, குழந்தை மார்புக்காம்பை கடிக்கும் போது, பால் கொடுப்பதை நிறுத்தப் படும்பாடு, மெனோபாஸ் என இப்படி ஒரு பெண் உடல் ரீதியாக, மனரீதியாகப் படுகிற அவஸ்தையை ஒருக்காலும் ஆணால் உணர்ந்து கொள்ள முடியாது.

அவ்வப்போது குழந்தை அழும்போது வாங்கித் தருகிற பொம்மைகள் போன்று பெண்களின் அழுகையை நிறுத்த, பட்டுப்புடவைகள் நகைகள் போன்றவற்றை ஆண் வாங்கித் தந்து ஏமாற்றுகிறான். சலுகைகள் காட்டுகிறான். ``உனக்கே உயிராய் இருப்பேன்’’ என்பதுபோன்ற பொய்யான கவிதைகளைப் புனைகிறான். ஆணைப் பொறுத்தவரை பெண் தன் சந்ததி வளர்வதற்காக, அவன் காசு கொடுத்து வாங்கிய உற்பத்திக்கருவி. அது பிள்ளை பெற்றுத் தர வேண்டும். குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். நன்றாக வாய்க்கு ருசியாகச் சமைக்க வேண்டும். வீட்டைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த உற்பத்திக்கருவி தன் ஆசைகளை, கனவுகளைப் பற்றி யோசிக்கிற நேரத்தில், நாய்க்கு எலும்புத்துண்டைத் தூக்கிப் போடுவதைப்போல, பல பரிசுகளை விட்டெறிய வேண்டியது. நாம் முழுமையாக அகற்ற வேண்டியது இந்த மனநிலையைத்தான்.

அடிமட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை, பெண்கள் வேலை செய்யும் எல்லா இடங்களிலும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறாள்.சிறுமியிலிருந்து கிழவிவரை கூட்டாகப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். `ஒரு பெண் நோ என்று சொன்னால் நோதான்.அவளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது அவள் விபசாரியாக இருந்தாலும்’ என்று பிங்க் போன்ற படங்கள் பேசலாம். சட்டப் பாதுகாப்புக் கிடைக்கலாம். பெண்கள் காவல் நிலையங்கள் ஏற்படலாம். ஆனாலும் ஆணுக்குச் சரியான புரிதல் உண்டாகாமல் இங்கே பெண் விடுதலை சாத்தியமில்லை.

பெண் உடலை முன்வைத்து அவளின் நிர்வாணத்தை வைத்து இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் பெண்களை மிரட்டிக்கொண்டு இருக்கப்போகிறோம்? பெண்ணின் உடல் யாரும் பார்க்காத ஒன்று. அது வெளியே தெரியும் பட்சத்தில் அவளின் கற்பு பறிபோகும், அவமானம் நேரும் என்றும், அவள் தற்கொலை தான் செய்துகொள்ள வேண்டும். அல்லது நிர்வாணமாகப் படம் எடுத்தவனை, அவளது உடலை வெளியுலகத்துக்குக் காட்டிக்கொடுத்தவனைப் பழிவாங்கிக் கொல்லத் தான் வேண்டும் என்பது மாதிரியான கற்பிதங்களை ஊடகங்களிலும், சினிமாக்களிலும், கதைகளிலும் இப்போதெல்லாம் மிக அதிகமாகக் காணமுடிகிறது. அருவருப்பாக உள்ளது. கற்ற சமூகமே இதைச் செய்கிறது.

எலெக்ட்ரானிக் மீடியாவில் அந்தரங்கம் அரங்கேறுவது சகஜமாகிவிட்டது. அதைப் பார்க்கத்தான் மனித மனம் ஆண்டாண்டு காலமாக ரசியமாக ஏங்குகிறது. எல்லா வழிகளிலும் முயற்சி செய்கிறது. இன்னொருவரின் அந்தரங்கத்தைத் தெரிந்துகொள்வதற்கென பிரம்மப்பிரயத்தனங்களை முன்னெடுக்கிறது. அதனால்தான் பிக்பாஸ் மாதிரியான ஒரு நிகழ்ச்சி இங்கே மாபெரும் வெற்றியடைகிறது. பெண்களை இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அதைத் துணிவுடன் எதிர்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும். சட்டரீதியாக எதிர்கொள்வதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். நம்முடைய மரியாதையும் மானமும் வெற்று உடலில் அல்ல என்பதை உணர்த்த வேண்டும். அத்தகைய துணிவை சிறுவயதிலிருந்தே நம் வீட்டுப் பெண்பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

ஆண்களுக்கு நிகராக இன்று பெண்கள் படிப்பதால், அவர்கள் பாலினப் பாகுபாடுகளைக் கடந்துவிட்டதாக ஒரு மாயை உருவாகத் தொடங்கிவிட்டது. அது ஆணாதிக்கத்தின் வேர்களை அசைத்துப் பார்க்கிறது. அவர்கள் வன்முறையோடு திருப்பித் தாக்குகிறார்கள். ஆனால், உண்மையான பாலினப் பாகுபாடு அத்தனை எளிதில் கிடைத்துவிடாது. காரணம், இங்கே பெண்களுக்கான விலங்குகள் பெண் களுடைய மனங்களில்தான் நிறைந்திருக்கிறது. அதை அவர்கள் விரும்பி அணிந்துகொள்கிறார்கள். ஆணாதிக்கத்தைத் தங்களுடைய உடலின் ஒரு பகுதியாக எண்ணவும் பழக்கப்படுத்தியிருக்கிற சமூகத்தில் அதன் ஒவ்வொரு கண்ணியையும் தகர்ப்பது அத்தனை எளிதல்ல... அதற்கு அணுகுண்டுகள் தேவை. அதைத் தயாரிக்கிற பெண்களைத்தான் நாம் நம் வீடுகளில் உருவாக்க வேண்டும். அதுதான் ஆண் பெண் சமத்துவத்துக்கான முதல் படியாக இருக்கும்!

- வெளிச்சம் பாய்ச்சுவோம்...

650 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page