அனிதாவின் மரணம்


அனிதாவின் மரணம் மனதை உலுக்குகிறது.

புதிய கல்விக்கொள்கை நீட் தேர்வு மாணவர்களின் பெற்றோர்களின் மன அழுத்தம் இவை எல்லாவற்றையும் இன்றைய சிபிஎஸ்ஐ மெட்ரிகுலேசன் பள்ளிகள் கடுமையாக உருவாக்குகின்றன.

மனனம் செய்கிற கல்வி முறை, மார்க் அடிப்படையில் முன்னிலை இப்படி மொத்த கல்விமுறையால் இன்றைய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

படிப்பு மூலம் தான் மாணவர்களுக்கு எதிர்காலமும் வேலைவாய்ப்பும் விடிவும் என்கிற வக்கிர மனஅழுத்தத்தை சமூகமும் பெற்றோரும் பள்ளிகளும் திரும்ப திரும்ப சொல்லி உருவாக்கி வைத்திருக்கின்றன.பிரேயர் போல தினமும் பள்ளிகளில் சொல்லி கொண்டே இருக்கின்றன.

இன்னும் எத்தனை அனிதாக்கள் மனதுக்குள் பொறுமிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் திரும்பி பார்க்கும் நிலையில் இருக்கிறோம்.

இந்த மரணத்திற்கு மட்டும் ஒட்டு மொத்தமாக பொங்கி எழுந்து விட்டு அமைதியாக இருந்து விடுவதை விடுத்து உள்நோக்கு பார்வையுடன் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

வறட்சியான விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மாநிலத்தில் முதல் நிலையில் உள்ளது. ஏனெனில் படிப்பு மட்டும் உன் எதிர்காலத்திற்கான விடிவு என்று சொல்லி சொல்லி வளர்க்கப்படுகிற மனநிலை. முதல் மார்க் எடுக்காவிட்டால் வாழ்க்கை அதோ கதி தான். பன்றி மேய்க்க தான் நீ போனும் என்கிற பயத்தையும் மற்ற தொழில்களை இழிவாக பார்க்கிற சமுதாய போக்கு தான் இதற்கு காரணம்.

என்ன மாதிரி இங்க இருந்து கஷ்டப்படாம இருக்கனுமுன்னா நல்லா படிச்சு எங்கிட்டாவது வெளிநாட்டுல போய் செட்டில் ஆயிடுப்பா என்ற ஏழை தகப்பனின் அறியாமை. அரசியல் ஆட்சியாளர்களின் போக்கு இப்படி நாடு இன்றைக்கு இருக்கிற நிலையும் தான் அதற்கு காரணம்.

எல்லா அறியாமைகளில் இருந்தும் விடுபடவேண்டிய நேரம் இது தான்.

அனிதாவின் மரணம் அதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.

65 views0 comments

Recent Posts

See All